ரொம்ப நாளாச்சுல்லா மக்கா கதயச் சொல்லி. அதான் இன்னைக்கு ஒரு கத சொல்லலாம்னு பாக்கேன். 'ஒரே கதயவே திரும்பத் திரும்ப அப்படியும் இப்படியுமா விட்டுட்டு இருக்கீரே தவிர என்னைககாவது நல்லதா ஒரு கத சொல்லுதீராவே கூறுகெட்ட கூகை'ன்னு சேக்காளி ஒருத்தன் துப்பாத கொறயா சொல்லிட்டுப் போயிட்டான் பாத்துக்கிடுங்க. அதான் 'சரிடே!'ன்னு மக்களுக்கு நாம ஒரு கதயச் சொல்லிடலாமேன்னு பாக்கேன்
'தக்காளி யாவாரி நம்ம பொழப்பக் கெடுத்தானே'ன்னு புலம்பிக்கிட்டே ப்யபுள்ளைலுவ எல்லாம் காட்டுக்குள்ள போயிருக்கானுவோ. நூறு ரூவா துட்டு கெடைக்குன்னதும் பயலுவ கொஞ்சம் சுதாரிச்சுக்கிட்டு குரங்கைப் புடிக்க ஆரம்பிச்சுட்டானுவோ. அவ்வளவுதான் ஆளாளுக்கு குரங்கப் புடிச்சிட்டு வர்றதும் காசு வாங்குறதுமா கொஞ்ச நாள் போனதும் குரங்குங்க எல்லாம் சுதாரிச்சுக்கிட்டுது.
இப்ப காட்டுக்குள்ள போனா குரங்கைப் புடிக்க குரங்குபாடா இருக்கு. 'சரிதான் போடே!'ன்னு நம்மாளுவ எல்லாம் பழயபடியும் (இ-கலைப்பையால)தாயக்கட்டையை எடுத்துட்டு உருட்ட ஆரம்பிச்சுட்டானுவோ.வியாபாரி பார்த்தான். இந்தக் கதை வெளங்காதேன்னு 'சரிடே! குரங்கப் புடிச்சா 200 ரூவா தரேன்"னு வெலயக் கூட்டிட்டான்.
காட்டுக்குள்ள இருக்குற குரங்கைத் தேடி போகலேன்னா வீட்டுக்குள்ள இருக்குற குரங்குத்தொல்லை தாங்க முடியாதேன்னு பழயபடியும் காட்டுக்குள்ள போயி குரங்கைப் புடிக்க ஆரம்பிச்சானுங்க குரங்குப் பயலுவ. அதுவும் எத்தனை நாளைக்கு தாங்கும்? குரங்கெல்லாம் கண்காணாம ஓடிப்போயிடுச்சு.
இந்த நெலைமைல யாவாரிக்கு யாவாரம் படுத்துடுமோன்னு கவலை வந்துடுச்சு. யாவாரி மக்களை எல்லாம் கூப்பிட்டான். "இந்தா பாருங்கடே! என்ன பண்ணுவியளோ தெரியாது. ஒரு குரங்குக்கு 500 ரூவா தரேன். நான் ஊருக்கு ஒரு சோலியா போவ வேண்டியிருக்கு. ஆனா என் ஆளை இங்கன விட்டுட்டு போறேன். அவன் கிட்ட குரங்கைக் கொடுத்துட்டு துட்டை வாங்குங்க"ன்னு சொல்லிட்டுப் போயிட்டான்.
இப்ப தூங்குமூஞ்சிப் பயலுவளுக்கே காசு மேல காதல் வந்துடுச்சு. 'எலே!500 ரூவால்லா குடுக்காவளாம்'ன்னு ஊரு்க்குள்ளே ஒரே பேச்சா போச்சு. ஆளாளுக்கு கோமணத்தை வரிஞ்சு கட்டிக்கிட்டு காட்டுக்குள்ள குரங்கைத் தேடி அலைஞ்சிருக்கானுவோ. குரங்கு எல்லாம் தெளிஞ்சுட்டதால ஒண்ணையும் புடிக்க முடியலை.
எல்லாரும் சோர்ந்து போயிட்டானுவோ. 'ஒரு குரங்கைக் கூட புடிக்க துப்பில்ல உமக்கு'ன்னு பொண்டாட்டிக்காரிய எல்லாம் புருசனுங்களை வசை பாட 'ஏன் உன்னைப் புடிச்சிட்டு வரலியா'ன்னு அவனவன் வாய்க்குள்ளாற முணுமுணுத்துட்டுக் கெடந்திருக்கானுவ.வாயை விட்டுச் சொல்ல முடியுமா என்ன?
அப்பப் பார்த்து அந்த யாவாரி விட்டுட்டு போன ஆளு வந்து கிராமத்துல எல்லாரையும் கூப்பிட்டான். "இந்தப் பாருங்கடே! நான் உங்களுக்கு ஒரு உதவி பண்ணுதேன். எனக்கு அவசரமா கொஞ்சம் பணம் வேணும். அதனால நான் உங்க்ளுக்கு இந்தக் குரங்கை எல்லாம் 350 ரூவாய்க்கு தரேன். ரெண்டு நாளைக்குள்ள யாவரி வந்துடுவான். அவன் ஊர்லருந்து வந்ததும் அவன் கிட்ட 500 ரூவாய்க்கு குரங்கை வித்துடுங்க'ன்னு சொன்னதும் அவனவன் பொண்டாட்டியைத் தவிர மத்ததெல்லாம் அடகு வச்சோ வித்தோ (மத்ததை எவனும் வாங்கலியாம் சாமி!!) ஆளாளுக்கு 5 குரங்கு ஆறு குரங்குன்னு போட்டி போட்டுட்டு வாங்கியிருக்கானுவோ. கண்ணு மூடி முழிக்குறதுக்குள்ள எல்லாக் குரங்கும் வித்துப் போச்சு.
எல்லாம் யாவாரி வர்றதுக்காகக் காத்திருந்தாங்க. குரங்கு ஒண்ணுக்கு 150 ரூவா மேனிக்கு லாபம்லா கெடைக்குன்னு. ஆனா அடுத்த நாளும் அடுத்த வாரமும் அடுத்த வருசமும் யாவாரியும் சரி அவன் கூட்டாளியும் சரி வரவேயில்ல. தெண்டத்துக்கு ஆளுக்கு 5 குரங்கை வீட்டுல கட்டிப்போட்டிருக்கானுங்க நம்ம ஊர்க்காரப் பயலுவ.ஒரு குரங்கு மட்டும் இவனுவளை திட்டிக்கிட்டே திரியுதாம். ஆக, காசுக்கு ஆசைப்பட்டு கொரங்கு கெடச்சதுதான் மிச்சம்.
கதை சொல்ற நீதி என்னன்னா, பேராசை பெரு நட்டம்னுதான் நீங்க நெனப்பீங்க. அப்படியில்லீங்க அண்ணாச்சி,
பங்கு வணிக உலகம் உங்களை அன்புடன் வரவேற்கிறது
0 comments:
Post a Comment