Wednesday, September 19, 2007

'பல்லி'க்கூடம்!

வெளியில் காற்று பலமாக வீசிக்கொண்டிருக்கிறது. யமுனாவுக்குத் தூக்கமே
வரவில்லை. சற்றுத் தள்ளி கிழவி படுத்து உறங்கிக்கொண்டிருக்கிறாள்.
பேத்தியின் மனநிலை மட்டும் அவளுக்குத் தெரிந்திருக்குமானால்,
துடித்திருப்பாள்.

இந்தத் தள்ளாத வயதிலும் அவள் தன் உயிரைப் பிடித்துக்கொண்டு வாழ்வதே
பேத்திக்காகத்தானே! பஸ் விபத்தொன்றில் மகளையும் மருமகனையும்
இழந்ததிலிருந்து இவ்வளவு காலமாக அந்தக் கிழவிதானே யமுனாவைக் கண்ணும்
கருத்துமாக வளர்த்து வருகிறாள்!

கிழவியைப் பார்க்கப் பாவமாயிருக்கிறது. தான் செய்வது சரியா என்று யமுனா
தன்னைத்தானே கேட்டுக்கொண்டாள்.

அவளது நெஞ்சில் இவ்வளவு போராட்டங்களுக்கும் காரணமாக இருப்பவன் மாதவன்.
படித்துவிட்டு வேலையற்று ஊர்சுற்றிக் கொண்டிருப்பவன்.. மணந்தால்
மாதவன்தானென்று இவளும், இவள்தானென்று அவனும் நினைத்துக்கொண்டிருந்த
சமயத்தில்தான், வசதிமிக்க சண்முகத்தை மணந்தால் யமுனாவின் வாழ்க்கை சீராக
இருக்குமென்று கணக்கிட்டு, நிச்சயதார்த்தத்துக்கு ஏற்பாடு செய்துவிட்டாள்
கிழவி. இதற்கு முடிவு.. மாதவனும் யமுனாவும் ஊரைவிட்டே ஓடிப்போவதுதான்..

நள்ளிரவு மாதவன் வருவான்.. தன்மேல் உயிரையே வைத்திருக்கும்
கிழவியிடம்கூடச் சொல்லாமல் மாதவனுடன் ஓடுவது யமுனாவுக்கு கஷ்டமாக
இருந்தது. தவிர, மாதவனுக்கோ வேலை வெட்டியென்று எதுவுமே கிடையாது.
இந்நிலையில் ஓடிப்போவது சரியான முடிவுதானா?

யமுனாவின் பார்வை, சுவரின்மேல் இரைக்காகக் காத்துக்கொண்டிருந்த
பல்லியின்மேல் திரும்பியது.. இந்த நேரம் பார்த்து அங்கே இன்னொரு பல்லி
பிரவேசித்தது. ஆண்பல்லியாக இருக்க வேண்டும். மெதுவே, பின்புறமாக வந்து
இரைக்காகக் காத்திருந்த இந்தப் பெண்பல்லியைத் தழுவ அது முற்பட்டது....
சட்டென்று இந்தப் பெண் பல்லி அதனிடமிருந்து தப்பித்து நழுவி ஓடத்
தொடங்கியது. சற்று நேரம் இப்படி ஆணை அலைக்கழிய வைத்து வேடிக்கை
பார்த்துக்கொண்டிருந்த அந்தப் பெண்பல்லி, ஆண்பல்லியின் மேல் பரிதாபம்
கொண்டதோ என்னவோ... இம்முறை ஓடாமல் ஆண் பல்லியை எதிர்பார்த்து அசையாமல்
நின்றது. ஆணும் அதுவரை நிகழ்ந்த ஊடலையெல்லாம் மறந்து கூடலை நாடி
பெண்பல்லியை நெருங்கியது. அந்தச் சமயம் பார்த்து எங்கிருந்தோ பூச்சியன்று
பெண்பல்லிக்கு முன்பாக வந்து அமர்ந்தது.

அதுவரை காதல் மயக்கத்தில் மூழ்கிக் கலவியின்பத்தை எதிர்பார்த்துக் கிடந்த
அந்தப் பெண் பல்லி தன் உணர்வுகளை எல்லாம் கணப்பொழுதில் மாற்றிக் கொண்டு
தன் முன்னால் வந்தமர்ந்த பூச்சியின் மீது பாய்ந்தது, 'லபக்‘கென்று பிடித்
துச் சுவைக்கத் தொடங்கியது. ஆண்பல்லி ஏமாற்றத்துடன் நின்றது. பசி உணர்வு
அவ்வளவு வலிமையானதா? காதலை விட, காமத்தைவிட பசி அத்தனை வலிமையானதா..?

அவள் மாதவனுடன் ஓடிப் போவதால் தற்காலிகத்தீர்வு கிடைக்கலாம். ஆனால்..
எத்தனை நாளைக்குத்தான் அவளை வைத்து அவனால் பராமரிக்க முடியும்? அவனுக்கு
ஒரு வேலை கிடைக்கும் வரை எப்படியாவது அவள் காத் திருக்க வேண்டும்.
கிழவியிடமும் அழுது கதறி அவள் சம்மதத்தை வாங்கிவிடலாம். அதுவரை, என்ன
ஆனாலும் சரி... ஓடிப்போக மட்டும் கூடாது...

யமுனா ஒரு தீர்மானத்துக்கு வந்தவளாக விட்டத்தைப் பார்த்தாள். பல்லிகளைக்
காணோம்!

0 comments:

Post a Comment